Friday, April 25, 2008

அந்த கணம்

ஒரு மாலை வேளை
ஒரு வழி பாதையில்
நினைவுகளின் சிறையில்
நின்று கொண்டு இருக்கிறேன்

சன்னல் ஓரம் கண்ணீருடன்
சிறு சிறு ஆனந்தம் பருகிய
தினங்களை
திரும்பி பார்க்கிறேன்

இரட்டை சடை முடித்து
கட்டி அணைத்த புத்தகப் பையுடன்
கற்பனை சிதற விட்டு
பள்ளி நோக்கி சென்றேனே
அந்த கணம்...

மாலை வேளை வகுப்பு முடிந்து
இல்லம் திரும்பும் வரை - ஒரு
இதயம் என்னை தொடர்ந்ததே
அந்த கணம்...

வீட்டு பாடம் எழுதுகையில்
புத்தக நடுவில்
பச்சரிசி போட்டு
மையிலிறகு குட்டி போட்டதை
ரசித்தேனே அந்த கணம்...

ஊரே மழைக்கு ஒதுங்கி நிற்க
குடை விட்டெறிந்து
நானும் நீயும் மட்டும்
நனைந்தோமே
அந்த கணம்...

ஒரு மாலை வேளை
ஒரு வழி பாதையில்
இலையுதிர் கால சிதறல்களாய்
என்றும் நிழலாடும்
அந்த கணம்...

No comments: