Sunday, May 18, 2008

சீனா பூகம்பத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி

பூமித்தாயே...
புவியைக் காத்தவளே...
என்ன குறை உனக்கு
ஏனிந்த சீற்றம்...

மலையுண்டு

மலை சூழும் முகிலுண்டு
அலையுண்டு
இளைப்பாற கரையுண்டு....
என்ன குறை உனக்கு
ஏனிந்த சீற்றம்?

வசந்தமாய் இருந்த நீ - இன்று

ஒன்றும் இல்லாதவளாய்
இல்லை இல்லை
எப்படி சொல்வது
ஒன்றும் இல்லாதவள் என்று...?

பல்லாயிரம் உயிர்களை

காவு கொண்டு - இன்று
அமைதியாய் இருக்கிறாய்
என்ன குறை உனக்கு
ஏனிந்த சீற்றம் ?

நீ
கொடுத்த

சுவாசக் காற்றினை
உன்னுள்ளேயே
பெற்றுக் கொண்டாயோ?

உறவுகளை இழந்தவர்கள்

உடைமைகளை இழந்தவர்கள்
பிள்ளைகளை இழந்தவர்கள்
பெற்றோரை இழந்தவர்கள்
எத்தனை ஆயிரங்கள் !
எத்தனை ஆயிரங்கள் !

இத்தனை உயிர்கள் - உனக்குள்
இரையாகிவிட்டு

உன்னுள் உறங்கி விட்டார்கள்
காவு கொண்ட நீ
களைப்பாறுகிறாய்
என்ன குறை
உனக்கு ஏனிந்த சீற்றம் ?

இருப்பவர்களை வாழ விடு

உன்னை நம்பி இருப்பவர்களை
உய்ய விடு....

உலகுள்ள வரை

உன்னை மறவோம் ...
நீங்காத நினைவலைகளையல்லவா
நீ கொண்டாய்...உனக்குள்ளே
ஒரு ஆணையிடு

எல்லை கோடு இடு...

போதுமம்மா தாயே

உன் சீற்றம் ....
உன் மடிவந்தோரை
வாழவிடு...

இனி ஒரு
ஜென்மம் எனினும்

பூகம்பப்பிறவி
உனக்கு வேண்டாம்

வேண்டவே வேண்டாம்....

Wednesday, May 14, 2008

சுடும் நிலவு


அறுவை சிகிச்சை அறை பார்த்து
அறை கூவல் எழுப்பும்
அருகாமையின் மத்தியிலும்
நம்பிக்கை சுடர் கொள்ளும் மங்கை...

கொண்டவனை காப்பாற்ற
கையேந்தும் நிலையிலும் - தன்
மாங்கல்யம் காக்க
மானம் காக்கும் நங்கை
வளைவுகளின் கிடுக்குகளில்
எங்கிருந்தோ கசிந்து
கொண்டிருக்கும் தண்ணீராக - இவள்
கவலையுடன் சிந்தும் கண்ணீர்...

ஏங்கும் விழிகளுடன்
தண் நிலவு கண்டு
வானம் பார்த்தாலும்
இவளுக்கு மட்டும் - அது
சுடும் நிலவாய்....

Tuesday, May 6, 2008

மரிக்கொழுந்து

பருத்திக்காட்டு விளைச்சலிலே
மச்சான் உன்ன பாத்துப்புட்டேன்
பாளையத்து மகமாயி
பக்கம் இருந்து துணை இருப்பா

கம்மங்கூழ கரைச்சு வச்சு
கருவாட்டுக் குழம்பு கொண்டாந்தேன்
உன் கைய புடிச்சு கரை சேர
கருமாரி வந்து காத்திடணும்

வானத்த பாத்து நிக்கேன்
வழியெல்லாம் தேடி அலைஞ்சேன்
மாமன் உன்ன சேரத்தானே
மாமாங்கமாய் காத்து கெடக்கேன்

அப்பனையும் ஆத்தாளையும் விட்டுப்புட்டு
உன்ன மட்டும் நம்பி வந்துப்புட்டேன் கழுத
விளையாட்டா ஏதும் செய்யல
விட்டுப்புடாத ஆமா

மஞ்சத் தண்ணி ஊத்தயிலே
மாமா உன்ன நினைச்சுப்புட்டேன் - ஒரு
மஞ்சத் தாலி கட்டிப்புடு
உன் கைய கோத்துக்கிட்டு வாரேன்

தென்ன மரக் கீத்து போட
தாய் மாமன் நீயும் வந்த
அருக்கானி சடை போட்டு
அழகா நானும் நிக்கேன்

மாமனுக்கு வாக்கப்பட்டு
வாழத் தானே வந்தேன்
மரிக்கொழுந்து வாசத்துல
மயங்கி நீயும் போன

பொட்டு வச்சு பூ முடிச்சு
புதுப்பொண்ணா வாரேன்
பூவாத்தா வாழ வப்பா
பூ மாலை நீ போடு....