Thursday, June 19, 2008

பூஞ்சோலை

புளியங்காட்டு தோப்புக்குள்ள
புளி பறிக்க நா போனேன்
பூஞ்சோலை என் பேரு
பொன்னாத்தா பெத்த மவ....

ஆனா ஆவன்னா அறியலையே
அப்பனாத்தா படிக்கலையே
கொட்டு வாங்கி படிச்சாலும்
புத்தியில ஏறலையே

வெளகெண்ணை வழிச்சு சீவி
ரெட்டை சடை பூச்சூடி
பள்ளிக்கூடம் போக சொன்னா
பாண்டியாட போனேனே

தெம்மாங்கு காத்து வாங்கி
தெருவெல்லாம் ஆடி புட்டு
அரச மர நிழலுக்கு தான்
துணையாக நின்னேனே

ஆத்துல மீனு புடிச்சு
கரையோரம் நெருப்பு மூட்டி
வக்கணையா வறுத்து தின்னு
வீடு வந்து சேந்தேனே

ஆண்டிபட்டி அரசம்பட்டி
அய்யாளத்து பாப்பம்பட்டி
ஆச மச்சான் நடந்து வந்தான்
பட்டு சட்டை வேட்டி கட்டி

ஆத்தோரம் புள்ளையாரு
ஆலமர அய்யனாரு
நேந்துக்கிட்டேன் நிசமாவே
மூணு முடி நீ போட...
அயித்த மகன் வந்தானேனு - ஆத்தா
ஆடு வெட்டி குழம்பு வச்சா
அயிர மீனு வறுத்து வச்சு....
உசுரா நானும் நின்னேனே

ஆட்டுக்கடா வெட்டி போட்டு
எலும்புக்கறி எடுத்து வச்சேன்
நறுநறுனு கடிச்சு துப்பி
நாசூக்கா கண்ணடிச்சான்
கண்ணால சாடை காட்டி
கை கழுவ மாமன் போக
பின்னால நான் போயி
கம்மாங்கரை சேந்தேனே....
பின்னால மாமன் வந்து
முன்னால என்ன கட்டி...
முழு முகத்த மறைச்சு வச்சு
முழம் பூவு குடுத்தானே
ஆச மச்சான் திரும்பி வர
ஆறேழு வருசமாகும்
ஆறேழு வருசங்கூ ட
ஆத்து நீரா ஓடி போகும்

நா என்னனு சொல்லி
புரிய வப்பேன்
நீ இல்லாத நாள
எதுக்குள்ள எழுதி வப்பேன்

வெவரம் புரியா என்ன
விட்டு தொலைஞ்சு போனா
நான் எங்க போவேன்டா
நாண்டுகிட்டு சாவேன்டா
நின்னா உன்ன காங்கேன்
உக்காந்தா உன்ன நெனைக்கேன்
உசிரு போயி சேருமுன்னே
வெரசா நீயும் வந்துடைய்யா
பெத்த மனசு தாங்காம
மருத்துவச்சிக்கு சொல்ல... - இது
மேலுக்கு வந்த நோயில்ல
மச்சான் மேல வந்த நோயின்னு ....
மச்சான் உன்ன காங்காம
மாமாங்கமா காத்திருக்கேன்
மார்கழி மாசக் குளிரு கூட
கத்திரி வெயிலா கொளுத்துதய்யா
எங்க நீ இருந்தாலும்
பூஞ்சோலை இங்க இருக்கா....
உசிர இறுக்கா புடிச்சுகிட்டேன்
உன் மடில உசிர விட....


3 comments:

N A V ! N said...

superb...

Unknown said...

hi kaushi, i read ur sirukadhai, miga arumai, please take ur works to the bigger world kaushi, i am just expecting the day like when kausalya will be added in the lists of the greatest poets and writers.All the best!

கௌசல்யா சங்கர் நம்பி said...

Thanks a lot Hema....

Sure do...